Thursday, September 23, 2010

அருவி

நம்பிக்கையின் விளிம்பில் பயணித்தவன்
இந்த நீரூற்றின் மேல் விளிம்பில் நின்றபடி
யோசித்தான்

மலையின் வெடிப்பில் பாய்ந்து
விழுந்துகொண்டிருக்கும் அருவி
எழுண்டுகொண்டிருக்கும் திவலை

ஒரு நீரால் எவ்வளவு ஆனந்தமாக
விழ முடிகிறது இவ்வளவு உயரத்திலிருந்து!

கரையின் விளிம்பில் இவ்வளவு ஒட்டில்
முளைத்து வளர்ந்திருக்குமிம் மரத்திற்கு
என்றாவது விழுந்துவிடுவோம்
என்ற பயம் இருக்கிறதா?
அதல பாதாளத்தை எட்டிப்பார்ப்பதுபோல்
தன் கிளைகளை நீட்டி பார்க்கிறது.

கவலைகளை கல்லென உருவகித்து
ஒவ்வொன்றாக நீர்ப்பள்ளத்தாகில் வீசுகிறான்.
ஒரு சிறு கல்லை எடுத்து
பள்ளத்தாக்கில் போடும் அந்த நொடியில்
இக்கரையிலிருந்து கிளம்பி
மறுகரையின்  முனையிலுள்ள மரத்திற்கு
சாவதானமாக பறந்து செல்கிறதொரு காகம்.

கல் தன் ஆழம் கடந்து நீரில் மூழ்கும் நொடியில்
இந்த காகம் மறுமுனயிலுள்ள மரத்தில் சென்று அமர்கிறது.
இரு பயணங்கள் நீள ஆழ பரிமாணங்களில்.

துயரின் கனங்கள்
துயரின் கணங்கள் 
ஒவ்வொரு கல்லாக எடுத்து போட்டுக்கொண்டேயிருக்கிறான்

ஒரு யதேச்சையான நொடியில் பார்க்கிறபோது
ஒரு காகம் மறுமுனைக்கு பறக்கிறது
கற்களெல்லாம் கரையில் மீந்திருக்க

No comments: